
லெனின் மதிவானம்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியமானது தனித்துவத்துடன் விளங்குகின்றது. பண்பாட்டாய்வுத்துறையின் ஜனநாயகப் பண்பு வளர வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாக உணரப்பட்டு வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டின் இப்புதிய முனைப்பை உணர்ந்ததன் விளைவாக புலம்பெயர் இலங்கைத் தமிழர் மத்தியிலிருந்து ஆரோக்கியமான கலாசாரப் பண்பாட்டு ஆய்வு முயற்சிகள் இடம்பெற்று வருவதனை காணக் கூடியதாக உள்ளன. அந்தவகையில் புலம்பெயர் இலங்கை தமிழரின் உணர்வுகளை, அவர்தம் வாழ்க்கையை கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் தன் சரித்திர தூரிகைக் கொண்டு புதியதோர் நாகரிகத்திற்கான சித்திரத்தை இவ்வாறு ஆக்குகின்றார்.
"உலகெங்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற
மனித சருகுகளாய் புரள்கின்றேன்
என்ன நம் தாய்நாடு
ஓயாமல் இலையுதிர்க்கும்
உயிர்ப்பிழந்த முதுமரமா.....?
யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினில்
தமிழ் நாட்டில் அம்மா.......
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா.....?
பாட்டனார் பண்படுத்தி
பழ மரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலைதேசம் வந்தவன் நான்
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழந்தோட்டம்......? "
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக, இலங்கைத் தமிழர் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்புதிய சூழலில் இவர்கள் எதிர் கொண்ட அனுபவங்களும் சவால்களும் தனித்துவமானவை. இப்பின்னணியே "புலம்பெயர் இலங்கை தமிழர்" (Sri Lankan Tamil Diaspora) என்ற சமூக இருப்பைத் தோற்றுவித்துள்ளது. புலம்பெயர் இலங்கைத் தமிழர், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நசிந்து சிதைவுக்குள்ளான வடகிழக்கின் வாழ்க்கை குறித்த மனிதநேயத்தை பதிவாக்கத் தவறவில்லை. அவ்வகையில் தன் வேள்வி வீழ்ந்து விடாமல் தொடர்வதற்குரிய பலத்தை பிரதிபலிக்கும் குரலாகவும் இதனை அர்த்தப்படுத்தலாம்.
இலங்கைத் தமிழரின் புலம்பெயர்வு அவ்வக் காலகட்டங்களில் திட்டுகளாகவும் தீவுகளாகவும் இடம்பெற்று வந்திருப்பினும் புலப்பெயர் இலங்கைத் தமிழர் என்ற சமூக இருப்பை நிலைநிறுத்தும் அம்சமாக அவை அமையவில்லை. 1960, 1970 களில் குறிப்பாக வடகிழக்கு தமிழர் மத்தியிலான புலம்பெயர்வு கல்வி, தொழில் நிர்ப்பந்தம் காரணமாக இடம்பெற்றது. இவர்கள் மேட்டுக்குடி சமூகமாக இருந்ததுடன் எண்ணிக்கையும் மிகச் சிறு தொகையாகவே காணப்பட்டது. நமது நாட்டின் வரிப்பணத்திலும் மற்றும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்திலும் பெற்ற கல்வியை மேலும் விருத்தி செய்து அதனூடே தமது அங்கீகாரத்தையும் அந்தஸ்த்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கே இவர்களிடம் முனைப்புற்றுக் காணப்பட்டன. இவர்களில் பலர் தமிழுணர்வு உடையவர்களாக இருந்துள்ளராயினும் பெரும்பாலும் அவர்களது அக்கறை சமுதாயத்தில் மேட்டுக் குடியினரையே சார்ந்திருந்தது. ஆண்ட பரம்பரை குறித்த உணர்வு இவர்களில் முனைப்புற்றிருந்தது. எனவே இவர்களின் உணர்வுகள் புலம்பெயர் தமிழர் என்ற அடையாளத்துடனான சமூக இருப்பாக மலரவில்லை. 1983 க்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சமூகப் பொருளாதார நெருக்கடிகள், இனவன்முறைகள் காரணமாக இந்தியாவிற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் போராட்டமானது இம்மக்களின் புலம்பெயர்வை அதிகரிக்கச் செய்தது. ஒரு புறமான சிங்கள பேரினவாத அடக்கு முறைகளும் மறுபுறமான தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாசிஸ்டுகளினது அராஜகப் போக்குகளும் இம்மக்களை நிலை தடுமாற வைத்தது. இந்த சூழலில் சமூகத்தின் வாய்ப்பும் வசதியும் பெற்ற மேட்டுக் குடியினர் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்ஸலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். வசதியற்றவர்கள் தமது சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெற்றும் இத்தகைய நாடுகளுக்குச் சென்றனர். இத்தகைய புலம்பெயர்வில் வயது முதிர்ந்தோர் சிலர் சென்றனர் என்ற போதிலும் பெருந்தொகையினர் இளைஞர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழில் தேடி சென்றவர்கள் என்பதை விட தமது உயிர்க்கு அஞ்சி புகலிடம் தேடிச் சென்றவர்களே என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிதொரு அம்சமாகும்.
இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அங்குள்ள கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியமானது இலங்கைத் தமிழரின் பண்பாட்டு பாரம்பரியத்தோடு பெரிதும் ஒத்திருந்தமையினால் அங்கு நிலைத்து வாழ எண்ணியோருக்கு அச்சூழலுக்கு தம்மைப் பழக்கப்படுத்துவதும் சங்கமமாவதும் ஓரளவிற்கேனும் சாத்தியமாயிற்று. ஐரோப்பிய நாடுகளின் நிலைமை வேறு விதமாக அமைந்திருந்தது. இச்சூழலில் இவர்களின் தாயக ஏக்கங்களும் தாய் மண்னை இழந்து செல்கின்றோம் என்ற உணர்வுகளும் புதிய கலாசாரப் பண்பாட்டுச் சூழலில் சுய அடையாளத்தை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்களின் சுய அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டதுடன் அந்நாடுகளில் இவர்கள் அந்நிய மனிதர்களாகவும் கறுப்பர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். தமது நாட்டிலே கல்வி, தகுதி அடிப்படையில் உயர் தொழிலில் ஈடுபடவேண்டியவர்கள் அந்நிய தேசத்தில் தோட்டங்கள், உணவுச் சாலைகள், பெற்றோல் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழில்களில் ஈடுபடுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். காலத்திற்குக் காலம் இந்நாடுகளில் கொண்டு வரப்படுகின்ற குடிவரவுச் சட்டங்களும் அந்நாட்டு மக்களிடையே வளர்ச்சி பெற்று வருகின்ற கறுப்பின எதிர்ப்புணர்வுகளும் புலம்பெயர் இலங்கைத் தமிழரை பாதிக்கவே செய்கின்றன.
மறுபுறமாக சமுதாய அக்கறையும் நேர்மையும் கொண்டவர்கள் இந்த புதிய சூழலில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் புதியதோர் நாகரிகத்திற்கான வேள்வியை தொடங்குவது தொடர்பிலும் ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் செயற்பாடுகள் கலாசாரப் பண்பாட்டு மீளமைப்பு முயற்சிகள் நம்பிக்கை தரக்கூடியனவாகவுள்ளன. அத்தகையதோர் மானுட தளத்தில் தடம் பதித்து நிற்கின்ற இந்நூலாசிரியர் க.அருந்தவராஜா இந்நூலினை ஆக்கியிருப்பது சிறப்பானதொரு அம்சமாகும்.
புலம்பெயர்நத வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுத முற்பட்ட இந்நூலாசிரியர் புலம்பெயர் தமிழராக இருப்பது இந்நூலை எழுதுவதற்குரிய முக்கிய தகுதியாக கருதுகின்றேன். இவ்வாழ்க்கை அனுபவங்கள் குறித்து தமது அறிவினால் மட்டுமன்று உணர்வாலும் உணர்ந்திருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன.

புலம்பெயர் மக்களின் அரசியல் பொருளாதார சமுதாயம் பற்றிய தரிசனத்தையும் சத்திய வேட்கையையும் திரித்துக் கூறவும் திரையிட்டு மூடவும் அவற்றுக்கு சமாதி கட்டவும் முயன்று வந்த சக்திகளை மீறி அம்மக்களின் சமூக பண்பாட்டுத் தளங்கள் எவ்வாறு தனித்துவ அடையாளங்களுடன் வளர்ந்தோங்கி நிற்கின்றன? இதன் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு வரலாற்று அடிப்படையிலும் விஞ்ஞான அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் விடை காணும் முயற்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. அவற்றை தக்க ஆதாரங்களுடனும் மேற்கோளுடனும் உதாரணங்களுடனும் எடுத்துக் காட்டுகின்றார். இந்நூல் மூலம் புலம்பெயர் இலங்கைத் தமிழரின் சமூக அனுபவங்கள் பண்பாடு குறித்து வரலாற்றில் நமக்கு அத்தியவசியமானதோர் சரித்திரத்தேவை பூர்த்தியாகின்றது என்று கூறலாம்.
என்றாலும் வரலாறு என்பது எந்த ஒரு கட்டத்திலும் முற்றுப் புள்ளி வைத்து முடிவு பெறுவதில்லை. ஒரு காலகட்டத்தின் முடிவு அடுத்த காலத்தின் தொடக்கமாகும். அந்தவகையில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பல புதிய புதிய விடயங்களை கண்டறிந்து வரலாற்றை செழுமையாக்கி வளர்ப்பதற்கு இந்நூலாசிரியரின் பணி தொடர வேண்டும் என்பது என் அவா.
வெளியீடு : கலை இலக்கிய பேரவை, (ஜெனீவா, சுவிற்சர்லாந்து)